Ads Header

Pages


25 March 2012

100 ஆண்டுகள் வாழவைக்கும் மூலிகை சமையல்

பசி எடுக்காமல் இருக்கும் போது, ஏன் கொஞ்சம் குமட்டலாக இருக்கும் போது சீர் செய்ய எளிய வழி.

சீரக டீ
சீரகம்: (English: Cumin seeds)
Family: Apiaceae
Botanical name: Cumin cyminum

தேவை:
சீரகம் - 2 தேக்கரண்டி,
பனம் கற்கண்டுத் தூள் - 2 தேக்கரண்டி.

செய்முறை: வாணலியை சூடாக்கி அதில் சீரகத்தை இட்டு நிறம் மாறும் வரை கருகும் நிலையில் எடுக்கவும்.
ஒன்றிரண்டாக இடிக்கவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் நீர் எடுத்து கொதிக்கவிட்டு, அந்த நிலையில் சீரகத்தை இட்டு மூடி வைத்து ஒரு கப் டீயாக சுண்டும் வரை மெல்லிய தீயில் வைத்து இறக்கவும். வடிகட்டி பனம்கற்கண்டு தூள் சேர்த்து சுவைக்கவும்.


---------------------------------------------------------------------
மருத்துவப் பயன்கள்: நன்கு பசி எடுக்கும். தலை சுற்றல், வாந்தி உணர்வு நீங்கும். வயிறு உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை குறையும். அடுத்து ஒரு நல்ல சுவையுள்ள பசி எடுக்க வைக்கும் குழம்பு வகையைப் பார்ப்போமா?

ஓமம் - சுக்குக் குழம்பு

ஓமம்..
(English: Ajwan)
Family: Apiaceae
Botanical name: Trachyspermum ammi

சுக்கு:
(English: Ginger.. Dried)
Family: Zingiberaceae
Botanical name: Zingiber offcianale

தேவை:
ஓமம் - 1 தேக்கரண்டி,
சுக்குப்பொடி - 1 தேக்கரண்டி,
தக்காளி துண்டங்கள் - 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் - 2 மேஜைக்கரண்டி
பூண்டுபல் - 10
மிளகாய் வற்றல் - 4
தனியா - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி கரைசல் - 1/2 கப்
உப்பு - ருசிக்கேற்ப
சமையல் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி.

செய்முறை: மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பு, மிளகு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வாணலியில் சிவக்க வறுத்து பொடித்து வைக்கவும். ஓமத்தை தனியே சூடான வாணலியில் ஒருமுறை புரட்டி எடுக்கவும்.

வாணலியை சூடாக்கி பாதி அளவு எண்ணெயை விட்டு, கடுகு வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பு, மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

வெங்காயம் மற்றும் தக்காளியோடு துளி உப்பு சேர்த்து வதக்கவும். இதோடு புளிக் கரைசல் மற்றும் மஞ்சள் தூள் மீதமுள்ள உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

இந்த நிலையில் ஓமம் மற்றும் சுக்குப் பொடி சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து மீண்டும் ஒரு கொதி வரும் போது இறக்கவும். சுடச்சுட சாதத்தில் கலந்து சாப்பிடவும்.

மருத்துவப் பயன்கள்: வெளியே சாப்பிட்ட உணவு செரிக்காமல் இருந்தால், அந்த விஷத்தன்மையை நீக்கும் குணம் வாய்ந்தது என்பர். இந்தக் கலவை குழம்பு

வயிற்று உப்புசத்தால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கும். அதாவது வாய்வை நீக்கி மீண்டும் வயிறு பழைய நிலைக்கு வர ஏதுவாகும். அஜீரண வாந்திக்கும் கை கண்ட கை வைத்தியம். குறிப்பாக அடி வயிற்றில் `சுருக் சுருக்' கென்று உண்டாகும் வலிக்கு நல்ல தீர்வை அளிக்கும்.மிக எளிதில் விரைவாக தயாரிக்கக்கூடிய இந்தக் குழம்பு மிக மலிவானதும் கூட!

-----------------------------------------------------------------------------------

பூண்டு சட்னி

பூண்டு பற்றி ஏற்கெனவே விரிவாகச் சொல்லி இருக்கிறோம். கேஸ் பிரச்சனையால் திண்டாடுவோருக்கு கை கொடுக்கும் சுவை மிகுந்த சட்னி.

தேவை:
பூண்டு பற்கள் - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4 தக்காளி
துண்டங்கள் - 2 மேஜைக்கரண்டி
புளி - சுண்டைக்காய் அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி உளுத்தம் பருப்பையும் மிளகாய் வற்றலையும் சிவக்க வறுத்து வாணலியில் தக்காளி துண்டங்களை இட்டு நன்கு வதக்கி அதோடு புளியையும் வதக்கி எடுக்கவும். பூண்டை நன்கு வதக்கவும்.

மிக்சியில் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், தக்காளி துண்டங்கள், புளி, உப்பு, பூண்டு ஆகியவற்றை இட்டு நன்கு விழுதாக அரைக்கவும். எண்ணெயை சூடாக்கி கடுகு வெடிக்கவிட்டு, அதில் அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவைகளோடு மிகவும் சுவையாக இருக்கும்.

மருத்துவப் பயன்கள்: வாய்வை உடனடியாக நீக்கும். வாய்வுத் தொல்லை யால் மூட்டுப் பிடிப்பு இருப்போர் இந்த சட்னியால் உடனடி பயனைக் காணலாம். குளிர்கால ஜீரண மந்தத்தைச் சீர் செய்யும்.

-------------------------------------------------------------------------------

ஜில்லுன்னு ஒரு ஜூஸ்

வயிற்றுக்குள் ஒரு புரட்சி நடக்கிறது. இரைச்சல், சத்தம், ஒரே கடமுடா எப்படி ஆசுவாசப்படுத்தி அமைதியை நிலை நாட்டுவது?

மாதுளை மேத்தி பட்டர் மில்க்

தேவை:
பொடித்த மாதுளை தோல் - 1 தேக்கரண்டி
வெந்தயப் பொடி - 1/4 தேக்கரண்டி
மோர் - 1 கப்
பொடித்த கற்கண்டு - 2 தேக்கரண்டி

செய்முறை: உலர்ந்த மாதுளை தோலையும், வெந்தயப் பொடியையும் நன்கு கலந்து மோரில் சேர்க்கவும். இதோடு கற்கண்டு பொடியையும் சேர்த்து மிக்சியில் அடித்து எடுக்கவும். ஜில்லென்று பருகவும்.

மருத்துவப் பயன்கள்: உஷ்ணத்தால் உண்டான வயிற் றோட்டத் துக்கு டாடா. சூட்டால் உண்டாகும் வயிற்று வலிக்கு தடா. உடல் குளுமை பெறும்.

--------------------------------------------------------------------------------
அருமருந்தொன்று நம் கையருகே இருக்கிறது. அது மணத்தக்காளி என்றொரு ஔஷதம். மலிவாகக் கிடைக்கும் இந்தக் கீரையும் மணத்தக்காளி வற்றலும் ஆற்றல் மிக்கது. வயிற்று உபாதை, புண், உடல் உள் ரணங்கள் அத்தனையும் ஆற்றும் செயல் பெற்றது.

இந்தக் கீரையையும் வற்றலையும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பல பிணிகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

ஜீரண மண்டலத்தைச் சீராக்கி வயிற்றைச் சுத்தமாக்கும் இது. முதலில் இந்த மணத்தக்காளி கீரையைப் பயன்படுத்தி ஒரு நல்ல கூட்டு செய்யலாம்.

மணத்தக்காளி கீரை சௌசௌ கூட்டு

தேவை
நறுக்கிய மணத்தக்காளி கீரை - 1 கப்
பொடியாக நறுக்கிய சௌசௌ - 1 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
நறுக்கிய தக்காளி - 2 மேஜைக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1 மேஜைக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, 2 மிளகாய்வற்றல், 1 சிட்டிகை பெருங்காயம் தாளிதம் செய்ய.

செய்முறை: மணத்தக்காளி கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கவும். சௌசௌவை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயத்தை வதக்கி, அத்துடன் தக்காளியையும் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு கூட்டி நன்கு வதக்கவும்.

இத்தோடு கீரை அதன்பின் சௌசௌ சேர்த்து வதக்கவும். இத்தோடு சிறிது தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பிட்டு வேகவிடவும். இந்த நிலையில் குழைய வேக வைத்த பாசிப்பருப்பை இத்தோடு சேர்க்கவும். தேங்காய்த் துருவல், மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்து இத்தோடு சேர்க்கவும்.

ஒரு கொதி வரும் போது கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிதம் செய்யவும்.

--------------------------------------------------------------------------------------

கிரீன் பெப்பர் பாத்

தேவை:
மணத்தக்காளிக் காய் - 1/4 கப்
கீறிய பச்சை மிளகாய் - 2
வடித்த சாதம் - 2 கப்
நெய் அல்லது நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கிள்ளிய கறிவேப்பிலை - 1 மேஜைக்கரண்டி
நறுக்கிய முந்திரி - 1 தேக்கரண்டி

செய்முறை: வாணலியில் நெய்யை சூடாக்கவும். மணத்தக்காளி காய், கறிவேப்பிலை, மற்றும் மிளகாய் இட்டு புரட்டி அத்துடன் உதிரான சாதத்தைச் சேர்த்து உப்பு கூட்டி நன்கு கலக்கவும். முந்திரியால் அலங்கரித்து, சூடாக பரிமாறி சுவைக்கவும். நாரத்தங்காய் என்பது பலரும் விரும்பாத ஒன்று. அதன் அழகற்ற வடிவத்தை வெறுப்போர், அதன் குணங்களை அறிந்தால்?

----------------------------------------------------------------------------------

நாரத்தைதோல் பேஸ்ட்

தேவை:

நாரத்தை தோல் மட்டும் - 1/2 கப் (உள்ளே இருக்கும் சுளைகளைப்
பயன்படுத்தக் கூடாது இதற்கு)
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
புளி கரைசல் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வெல்லக் கரைசல் - 1/4 கப்
பொடித்த கறிவேப்பிலை - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
உப்பு - ருசிக்கேற்ப
கடுகு - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1/4 கப்

செய்முறை: கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல் ஆகிய வைகளை வாணலியில் சிவக்க வறுத்து எடுத்து பொடிக்கவும். புளி கரைசலில் மஞ்சள் தூள், பாதி உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்.

நாரத்தைத் தோலை துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகை வெடிக்கவிட்டு, அதோடு நாரத்தை துருவலைச் சேர்த்து புரட்டவும். அதோடு புளிக் கரைசலைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். வெல்லக் கரைசலையும் மீதி உப்பையும் சேர்த்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை சுண்ட வைக்கவும். சுத்தமான கண்ணாடி பாட்டிலில் பாதுகாத்து வைக்கவும்.

மருத்துவப் பயன்கள்: பித்தம் குறைந்து நன்கு பசி எடுக்கும். குமட்டல், ருசியின்மை ஆகியவை தீர்ந்து உண்ண ஆர்வம் பிறக்கும். வாசகர்களே, எளிதாகக் கிடைக்கும் பொருட்களையே பயன்படுத்தி பயன் அடையும்படி இங்கே கூறப்பட்டுள்ளது. அவ்வப்போது மேலே குறிப்பிட்ட உணவு பக்குவங்களைப் பயன்படுத்தி வந்தால் வயிறு உபாதை இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner