Ads Header

Pages


08 March 2012

அம்புலி 3 டி - சினிமா விமர்சனம்

நடிகர்கள்: பார்த்திபன், அஜய், ஸ்ரீஜித், தம்பி ராமையா, சனம், ஜோதிஷா அம்மு, ஜெகன், கோகுல்
இசை: வெங்கட் பிரபு சங்கர், சாம், சதீஷ், மெர்வின்
பிஆர்ஓ: மவுனம் ரவி
ஒளிப்பதிவு: சதீஷ் ஜி
எடிட்டிங்: ஹரி சங்கர்
எழுத்து - இயக்கம்: ஹரி சங்கர் - ஹரீஷ் நாராயணன்.
தயாரிப்பு: கேடிவிஆர் லோகநாதன்




 

தமிழின் முதல் ஸ்டீரியோஸ்கோப் 3 டி படம் என்ற அறிமுகத்தோடு வந்திருக்கிறது அம்புலி.


மனோஜ் ஷியாமளனின் 'வில்லேஜ்' மாதிரி ஒரு த்ரில்லர் கதையை 3 டியில் சொல்ல முயன்றிருக்கிறார்கள் புதிய இயக்குநர்கள் ஹரி சங்கர் - ஹரீஷ் நாராயணன்.

இந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். க்ளைமாக்ஸை இன்னும் புத்திசாலித்தனமாக, மிரட்டலாக அமைத்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு.

எழுபதுகளின் இறுதியில் நடக்கிறது கதை. கிராமத்தையொட்டியுள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் வேந்தன் (ஸ்ரீஜித்) அமுதன் (அஜய்) இருவரும், கோடை விடுமுறைக்கு கூட ஊருக்குச் செல்லாமல் கல்லூரி வாளகத்திலேயே தங்கிவிடுகின்றனர். வேந்தனின் தந்தை தம்பி ராமையாதான் அந்தக் கல்லூரி வாட்ச்மேன். அமுதனுக்கு பக்கத்து கிராம பஞ்சாயத்து தலைவர் பெண் மீது காதல். இந்த விடுமுறையில் காதலைச் சொல்ல அங்கேயே தங்கிவிடுகிறான்.

ஒரு இரவு நண்பன் துணையுடன் தன் காதலியைப் பார்க்கச் செல்கிறான். இந்த கிராமத்திலிருந்து பக்கத்து கிராமத்துக்கு செல்ல ஒரு சோளக்காட்டு குறுக்கு வழி உண்டு. ஆனால் அந்த வழியாக யாரும் செல்லப் பயப்படுவார்கள். காரணம் அம்புலி. அம்புலி ஆளை அடித்து கொன்றுவிடும் என்ற பயம். அதற்காகவே சோளக்காட்டுக்கு குறுக்கே தடுப்பு சுவரெழுப்பி வசிக்கிறார்கள் கிராமத்தினர்.

ஆனால் அந்த பயமின்றி, நண்பனை தடுப்பு சுவர் அருகில் நிற்கவைத்துவிட்டு நிலா இரவில் காதலியைப் பார்க்கப் போகிறான் அமுதன். போகும்போது பிரச்சினையில்லை. வரும்போது அவனை நடுங்க வைத்துவிடும் அளவு திகிலான நிகழ்வுகள் நடக்க அலறிப் புடைத்துக் கொண்டு வருகிறான் அமுதன்.

தனக்கு நேர்ந்ததை நண்பனிடம் சொல்ல, அதைக் கேட்கும் தம்பி ராமையா அம்புலியின் கதையைச் சொல்கிறார்.

ப்ளாஷ்பேக்கில் கர்ப்பிணியான உமா ரியாஸுக்கு குழந்தை பிறக்கிறது. பிறக்கும்போதே மிருகமாகப் பிறக்கும் அந்தக் குழந்தை, மருத்துவம் பார்த்த பெண்ணின் கழுத்தைக் கடித்துக் கொன்றுவிடுகிறது. ஊர் பயந்து நடுங்குகிறது. அந்த குழந்தையை கொல்லச் சொல்லி வற்புறுத்த, கொல்ல மனமின்றி, புறவாசல் பக்கம் இருக்கு சோளக்காட்டுக்கு துரத்திவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்கிறார் உமா. அந்தக் குழந்தை வளர்ந்து அம்புலியாகி, மனிதர்களை அடித்துக் கொன்று சாப்பிடும் அளவுக்குப் போய்விட்டதாக தம்பி ராமையா சொல்கிறார். இந்த அம்புலியுடன் பிறந்தவரான பார்த்திபன் மட்டும் அம்புலிக்குப் பயப்படாமல் சோளக்காட்டுக்கு நடுவில் குடிசை கட்டி வசிக்கிறார்.

ஒரு பெண்ணின் வயிற்றில் இப்படியொரு மிருகம் தோன்ற காரணம் என்ன என்பது இன்னொரு கிளைக்கதை. இந்த அம்புலியை எப்படி அழித்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

தமிழில் சில காட்சிகளைத்தான் இதற்கு முன்பு 3 டியில் காட்டினார்கள். ஆனால் இந்தப் படத்தில் அனைத்துக் காட்சிகளுமே 3 டி. சில காட்சிகளில் ஈட்டி கண்ணைக் குத்திவிடுமோ என சட்டென்று கண்ணாடியைக் கழட்டுமளவுக்கு அசத்தல்.

மகள் சொல்லச் சொல்ல கேட்காமல் சோளக்காட்டுக்கு நடுவில் குடித்துவிட்டு தடுமாறிக்கொண்டே அடமாக மொட்டை ராஜேந்திரன் நடக்கும் அந்தக் காட்சியே கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது.

ஆனால் சில காட்சிகள் தொடர்பற்றுத் தெரிவதால், குழப்பங்கள், கேள்விகள். பார்த்திபன் பாத்திரம் மிரட்டலாக இருந்தாலும், அந்தப் பாத்திரம் அம்புலியைக் கொல்ல வருவது எதனால் என்பதில் தெளிவில்லை.

அம்புலி என்ற அந்த கேரக்டருக்கு படம் முழுக்க அவ்வளவு பில்ட் அப் கொடுத்துவிட்டு, கடைசியில் மனிதக்குரங்கை விட சற்று பெரிய சைஸ் உருவத்தைக் காட்டி, இதுதான் அத்தனை கொலைகளுக்கும் காரணமான அம்புலி எனும்போது சப்பென்றாகிவிடுகிறது, அந்த சஸ்பென்ஸ்.

குறைகள் சில இருந்தாலும், ஒரு வித்தியாசமான முயற்சி என்ற வகையில் இந்தப் படத்தை பாராட்டத்தான் வேண்டும். அதுவும் எந்த வெளிநாட்டு கலைஞர்களின் துணையுமின்றி, கோடம்பாக்கத்திலேயே இத்தனை நுட்பமாக 3டி படம் காட்டியிருப்பது சாதாரண விஷயமல்ல.

வெறும் 'ஹார்ரர்' வகைப் படமாகக் காட்டாமல், விஞ்ஞான ஆராய்ச்சி என்ற பெயரில் நடக்கும் விபரீதங்களைத் தவிர்ப்போம் என்ற மெசேஜும் படத்தில் உண்டு.

ஹீரோக்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. எல்லோருமே முக்கிய பாத்திரங்கள்தான். இவர்களில் பார்த்திபன் அசத்தலாக செய்திருக்கிறார். என்ன அவரது தோற்றம்தான் ஆயிரத்தில் ஒருவனை நினைவுபடுத்துவதாக உள்ளது.

புதியவர்கள் ஹரீஷ், ஸ்ரீஜித், கோகுல், சனம், ஜோதிஷா அம்மு என அனைவருமே சரியாக செய்திருக்கிறார்கள் தங்கள் பாத்திரங்களை. தம்பி ராமையா வழக்கம் போல அருமையான நடிப்பைத் தந்துள்ளார்.

ஜெகன்தான் படத்தில் அம்புலியை உண்மையில் கண்டுபிடிப்பவர். சிறப்பாக செய்துள்ளார். அம்புலியாக கோகுல் நடித்துள்ளார்.

நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்த படம். இரண்டு பாடல்கள் ஓகே. பின்னணி இசை நன்றாக உள்ளது. ஒளிப்பதிவுதான் படத்துக்கு உண்மையான ஹீரோ. அந்த சோளக்காட்டை காட்டிய விதத்திலேயே பாதி பயத்தை மனதில் விதைத்துவிடுகிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் ஜி. ஹரி சங்கரின் எடிட்டிங் கச்சிதம். படத்தை இரண்டரை மணி நேரத்துக்குள் முடித்திருப்பது இன்னொரு ப்ளஸ்.

முதல் பரீட்சையே கடினமானதாக அமைந்திருந்தாலும், விருப்பத்தோடு செய்திருப்பதால் பார்வையாளர்களிடம் பாஸ் மார்க்கோடு, பாராட்டுகளையும் பெறுகின்றனர் புதிய இயக்குநர்கள்!

1 comments:

கோவை நேரம் said...

அருமை...ரொம்ப நாள் கழித்து விமர்சனம்

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner