Ads Header

Pages


08 March 2012

சிக்கன் குழம்பு - சிக்கன் சாப்பீஸ்-இஸ்லாமிய முறை - சமையல் குறிப்புகள் !

சிக்கன் குழம்பு - இஸ்லாமிய முறை

இஸ்லாமிய இல்லங்களில் தயாராகும் கோழிக் குழம்பினை நமக்கு செய்து காட்டுகின்றார் திருமதி. ஃபைரோஜா ஜமால். இதில் பயன்படுத்தும் கறிமசாலாவைத் தனியாக செய்து வைத்துக் கொள்ளவும். மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டு, தேவையான போது தேவையான அளவு எடுத்து, எல்லா கறி வகைகளுக்கும் பயன்படுத்தலாம்.

தேவையானப் பொருட்கள்
சிக்கன் - அரை கிலோ
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி
கறி மசாலா - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தூள் - கால் கப்
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
தேங்காய் பூ - முக்கால் கப்
தயிர் - அரை கப்
பச்சை மிளகாய் - 5
முந்திரி - 5
எண்ணெய் - கால் கப்
உப்பு - 1 1/2 மேசைக்கரண்டி
மல்லித்தழை, புதினா இலைகள் - கால் கப்

கறி மசாலாத் தூள் செய்முறை : சீரகம் 250 கிராம், மிளகு 100 கிராம், சோம்பு 100 கிராம், ஏலக்காய் 10 கிராம், கிராம்பு 15 கிராம், பட்டை 25 கிராம் எடுத்துக் கொள்ளவும். சீரகம், சோம்பு, மிளகு மூன்றையும் காய வைத்து எடுத்து மற்றப் பொருட்களுடன் சேர்த்து இயந்திரத்தில் அரைத்துக் கொள்ளவும்.

சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காய் மற்றும் முந்திரி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி விட்டு நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு எல்லாம் ஒன்று சேரும் வரை கிளறி கொண்டே இருக்கவும்.

சற்று குழம்பு போல் வந்தவுடன் அதில் சிக்கன் துண்டுகளைப் போட்டு பிரட்டி விடவும்.

அத்துடன் கறி மசாலா, தயிர், உப்பு அனைத்தையும் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றவும்.

கடைசியாக மல்லித்தூளைக் கொட்டி கிளறி விட்டு, மூடி வைத்து வேகவிடவும்.

சுமார் 8 நிமிடங்கள் கழித்து, கறி வெந்து, குழம்பு நன்றாக கொதித்து வரும் போது அரைத்த தேங்காய் விழுதினைப் போட்டு கிளறி விட்டு, அடுப்பின் தீயைக் குறைத்து மேலும் 5 நிமிடம் வேகவிடவும்.

இறக்குவதற்கு முன்பு கொத்தமல்லித் தழை தூவவும். சுவையான இஸ்லாமிய இல்லத்து சிக்கன் குழம்பு ரெடி.

இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் கைமணம் இந்த கோழிக் குழம்பு. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வருகின்றார். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன
====================================================================

பரோட்டா சிக்கன் குருமா


இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கப்படும் பரோட்டா குருமா இது. கோழிக்கறி கொண்டு செய்யப்படும் முறை இதையே ஆட்டுக்கறி கொண்டும் செய்யலாம். ஆட்டுக்கறி வேக சற்று நேரம் எடுக்கும் என்பதால், தனியாக கறியை மட்டும் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, பிறகு கோழிக்கறி சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடவும். அல்லது குக்கரில் வேக வைக்கும்போது இன்னும் சற்று அதிக நேரம் வேக வைத்து எடுக்கவும். கறி மசாலா செய்முறை ஏற்கனவே இஸ்லாமிய முறை சிக்கன் குழம்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையெனில் பார்வையிடவும்.

தேவையானப் பொருட்கள்
கறி - கால் கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
தேங்காய் விழுது - கால் கப்
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கறி மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 3 தேக்கரண்டி

அதிகம் எலும்பில்லாத இறைச்சியாக எடுத்து, கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஆட்டிறைச்சி என்றால் சிலர் எலும்புக் கறியாக சேர்த்துக் கொள்வர். விருப்பத்திற்கேற்றார்போல் எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களைத் தயாராய் எடுத்து வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை விழுதாக அரைத்து கால் கப் எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

ஒரு நிமிடம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

பின்னர் நறுக்கின தக்காளி, கொத்தமல்லி, புதினா இலைகள், கீறின பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

தக்காளி வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறிவிடவும்.

பிறகு அதில் சிக்கனைப் போட்டு பிரட்டி விடவும்.

இப்போது அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கிளறிவிடவும்.

அதிலேயே கறி மசாலா, மல்லித் தூள், உப்பு போட்டு கலக்கி விடவும். இதனை சிறிது நேரம் வேகவிடவும்.

3 நிமிடம் கழித்து தேங்காய் விழுது சேர்த்து கலக்கி விட்டு குக்கரை மூடி விடவும்.

குக்கரில் வெயிட் போட்டு இரண்டு விசில் வரை வேகவிடவும். கறி வெந்தது பார்த்து இறக்கி சூடாக பரோட்டாவுடன் பரிமாறவும்.


======================================================================
சிக்கன் சாப்பீஸ்
இன்றைக்கு நாம் பார்க்கப் போவது ஒரு அசைவ உணவு. அசைவ உணவுப் பிரியர்களால் அதிகம் சாப்பிடப்படும் இறைச்சி கோழி இறைச்சிதான். இதன் சுவை மிக அதிகம். எளிதில் கிடைக்கக்கூடியது. சமைப்பதும் எளிது. சத்துக்களுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. கொழுப்பு மிகவும் குறைவு. இப்படி பல ப்ளஸ் பாயிண்ட்ஸ் இருப்பதால், உலகளவில் அதிகம் உண்ணப்படும் இறைச்சியாய் இருக்கின்றது.

தேவையானப் பொருட்கள்
சிக்கன் - அரைக் கிலோ
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 1
கறி மசாலா - கால் கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒன்றே கால் மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா நறுக்கியது - கால் கப்
கரம் மசாலா - அரைத் தேக்கரண்டி
தயிர் - அரை கப்
உப்பு - அரை மேசைக்கரண்டி
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி

எலும்பு அதிகமில்லாத சதைப்பாகமா பார்த்து அரைக் கிலோ அளவிற்கு கோழிக்கறியினை எடுத்துக் கொள்ளவும். கால் எலும்பினை ஒட்டின சதைப்பகுதியாக இருந்தாலும் பரவாயில்லை. சுமார் 12 துண்டங்கள் இருக்குமளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை சேர்த்து அரைத்த பொடியில் அரைத் தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். இல்லையெனில் கரம் மசாலாப் பொடி எடுத்துக் கொள்ளவும். மற்ற பொடிகள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை மேலே குறிப்பிட்ட அளவுகளில் எடுத்து தயாராய் வைத்துக் கொள்ளவும்.

புதினாவை காம்பு நீக்கி இலைகளாக எடுத்துக் கொள்ளவும். மல்லித்தழையை அடிக்காம்பு நீக்கி எடுத்துக் கொள்ளவும். பழுத்த நாட்டுத் தக்காளியாக தேர்வு செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு சற்று நிறம் மாறும் வரை வதக்கவும்.

அதன் பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும். தக்காளியை வதக்கும் போது மட்டும் தீயின் அளவை சற்று அதிகமாக்கிக் கொள்ளலாம்.

அத்துடன் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து கிளறிவிட்டு சில நொடிகள் வேக விடவும். பச்சை வாடை சற்று குறைந்தவுடன் எடுத்து வைத்துள்ள கொத்தமல்லியில் முக்கால் பாகத்தைச் சேர்க்கவும். விரும்பினால் சிறிது புதினா இலைகளையும் போடலாம். கிளறிவிட்டு வேகவிடவும்.

பின்னர் மிளகாய்த்தூள், கறிமசாலா, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

பிறகு அதில் உப்பு, தயிர் ஆகியவற்றையும் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகச் பிரட்டி விட்டு வேகவிடவும்.

சற்று நேரம் வெந்தவுடன் திக்கான குழம்பு போன்ற பதத்திற்கு வரும். அப்போது கோழிக்கறித் துண்டுகளைப் போடவும். தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிரட்டி விட்டு வாணலியை மூடி வைத்து சுமார் ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.

இறக்குவதற்கு சற்று முன்பாக கரம் மசாலாப் பொடியைத் தூவவும். மசாலா நன்கு சுண்டி, கறியும் நன்கு வெந்தவுடன் மீதமுள்ள கொத்தமல்லித் தழை, புதினா ஆகியவற்றை மேலேத் தூவி இறக்கவும்.

இப்போது சுவையான சிக்கன் சாப்பீஸ் தயார். இது இஸ்லாமிய இல்லங்களில் அடிக்கடி செய்யப்படும் கறிவகை.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள கறி ஒரு இஸ்லாமிய இல்லத்தரசியின் கைமணம்தான். இந்தக்குறிப்பினை வழங்கி அதனைச் செய்து காட்டியவர் திருமதி. ஃபைரோஜா ஜமால். ஏராளமான இஸ்லாமிய உணவுகளை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்ட உள்ளார்.


இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கப்படும் கோழி உணவு தனிச்சுவை உடையது. இதில் கொடுக்கப்பட்டுள்ள கறி மசாலாவானது பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு, மிளகு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்து எடுக்கப்பட்டது. மிளகாய் சேர்த்து அரைப்பது கிடையாது. மிளகாய்த்தூள் தனியாக சேர்த்துக் கொள்ளவேண்டும். மல்லித்தூள் சேர்ப்பது இல்லை
----------------------------------------------------------------------------------------
கோழி வெள்ளை குருமா


தேவையான பொருட்கள்

சிக்கன் - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 50 கிராம்
பட்டை - 2 கிராம்
இலவங்கம் - 2 கிராம்
ஏலக்காய் - 2 கிராம்
பிரிஞ்சி இலை - 1
பச்சை மிளகாய் - 10 கிராம்
சோம்பு - 5 கிராம்
இஞ்சி - 25 கிராம்
மிளகாய்தூள் - 10 கிராம்
தயிர் - 50 கிராம்
தேங்காய் - 1/2 மூடி
எண்ணை - 50 மில்லி
முந்திரி - 50 கிராம்
கசகசா - 20 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
பூண்டு - 25 கிராம்

செய்முறை

இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

தேங்காய், கசகசா, முந்திரி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

சிக்கனை, தயிர் மற்றும் சிறிதளவு இஞ்சி, பூண்டு சேர்த்து ஊற வைக்கவும்.

எண்ணெயை சூடு செய்து கறி மசாலாக்களை சேர்த்து சோம்பு, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி, பூண்டு மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.

சிக்கன் மற்றும் தேங்காய்- முந்திரி அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

சுவையை சரி பார்க்கவும்.

இறுதியில் கிரீம் சேர்க்கவும். தேவைப்பட்டால் (நீளவாக்கில்) நறுக்கிய வறுத்த கறிவேப்பிலையை சேர்த்து அலங்கரிக்கவும்.

கோழி வெள்ளைக் குருமாவை ஆப்பம் மற்றும் தோசைக்கு பரிமாறலாம்.
------------------------------------------------------------------------------------
எக் சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

காய்ந்த மிளகாய்-ஆறு
தனியா-ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம்-அரை டீஸ்பூன்
மிளகு-அரை டீஸ்பூன்
சோம்பு-ஒரு டீஸ்பூன்
மஞ்சத்தூள்-அரை டீஸ்பூன்
பட்டை-ஒரு துண்டு
இலவங்கம்-மூன்று
ஏலக்காய்-இரண்டு
வெங்காயம்-இரண்டு
தக்காளி-இரண்டு
பச்சைமிளகாய்-இரண்டு
இஞ்சி-ஒரு துண்டு
பூண்டு- ஆறு பற்கள்
புளி- சிறிதளவு
தேங்காய்- அரைமூடி
கொத்தமல்லி இலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கோழித் துண்டுகள்-அரைக் கிலோ
வேகவைத்த முட்டை-ஐந்து

செய்முறை:

மிளகாய்,தனியா மிளகுசீரகம்,சோம்பு ஆகியவற்றை வெறும் சட்டியில் போட்டு இலேசாக வறுத்து பொடிக்கவும்.

இந்த பொடியை கோழியுடன் சேர்த்து அரை தேகரண்டி உப்புத்தூளை போட்டு நன்கு கலக்கி ஊறவைக்கவும்.

இஞ்சிபூண்டுடன் வாசனை பொருட்களை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

தேங்காயை தனியாக மைய்ய அரைத்து கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை அரிந்து கொள்ளவும்

சட்டியில் எண்ணெய்யை காயவைத்து வெங்காயத்தை போட்டு சிவக்க வறுக்கவும்.பிறகு இஞ்சிபூண்டு விழுதைவும் மஞ்சத்தூளைவும் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி, பச்சைமிளகாயை,கொத்தமல்லிதழையை போட்டு நன்கு வதக்கவும்.தொடர்ந்து ஊறவைத்துள்ள கோழித்துண்டுகளை போட்டு நன்கு கிளறிவிட்டு மீதியுள்ள உப்பை போட்டு நன்கு புரட்டவும்.

பிறகு இரண்டு கோப்பை தண்ணீருடன் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.கோழி வெந்தவுடன் தேங்காய் விழுதை அரை கோப்பை தண்ணீரில் கரைத்து ஊற்றி,நன்கு கலக்கி,உறித்து வைத்துள்ள முட்டைகளையும் போட்டு.மீண்டும் கொதிக்கவிடவும்.குழம்பு பதம் வந்தவுடன் இறக்கிவிடவும்.
-------------------------------------------------------------------------------------------------
எலும்பு நீக்கிய கோழி மிளகு மசாலா

கார சாரமான இந்த side dish சப்பாத்தி, நான், பரோட்டா, தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதம் இவைகளுக்கு மிக நன்றாக பொருந்தும்.

தேவையான பொருட்கள்
எலும்பு நீக்கிய கோழி இறைச்சி - 1/4 கிலோ.
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது.
தக்காளி சிறியது - 1 பொடியாக நறுக்கியது.
இஞ்சி பூண்டு - 1/4 தேக்கரண்டி.
பட்டைத் தூள் - 1/4 தேக்கரண்டி.
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணை - 3 மேஜைக்கரண்டி.
கறிவேப்பிலை - 1 கொத்து.
கொத்தமல்லி தழை - பொடியாக நறுக்கியது.
உப்பு தேவையான அளவு.
அரைக்க :-
மிளகு - 2 தேக்கரண்டி.
ஜீரகம் - 1/2 தேக்கரண்டி.
தனியாத்தூள் - 1/2 தேக்கரண்டி.
பூண்டு - 6 பல்
இவை நான்கையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை
Non stick பாத்திரத்தில், எண்ணை சேர்த்து சூடானவுடன் வெங்காயத்தை மிதமான தீயில் பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பொடியாக நறுக்கிய தாக்காளியை போட்டு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
இப்போது boneless chicken ஐ அதில் கலந்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கறி வேப்பிலை சேர்த்து வாசம் வரும்வரை கிளறி, மிளகாய்த் தூள் சேர்த்து பிரட்ட வேண்டும்.
இந்த நிலையில் அரைத்து வைத்துள்ள மசாலாவை கொட்டி, மூழ்கும்வரை நீர் ஊற்றி மிதமான தீயில் எண்ணை மிதந்து வரும் வரை சமைக்க வேண்டும்.
பரிமாற தயார்.

குறிப்பு:
Boneless chicken க்கு மாற்றாக காடை இறைச்சியுடன் செய்தால் சுவையோ சுவை.

பரிமாறும் அளவு 4 பேருக்கு
====================================================================
சிக்கன் சாப்பீஸ்(வேறு முறை)

தேவையான பொருட்கள்
கோழி - 1/2 கிலோ
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
மல்லி கீரை - 1கட்டு
எலுமிச்சை பழம் - பாதி
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை
முதலில் கோழி கறியில் மிளகாய்த்தூள், மசாலாத்தூள், மஞ்சள் தூள், பாதி இஞ்சி பூண்டு விழுது, பாதி உப்பு அனைத்தையும் போட்டு நன்றாக புரட்டி 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொண்டு, தக்காளி, பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் பாதி எண்ணெய்விட்டு, மசாலாவில் ஊறிய கோழியை சற்று முறுகலாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீதி எண்ணெயை இன்னொரு வாணலியில்விட்டு, மீதி இஞ்சி பூண்டு விழுதை போட்டு முறுக ஆரம்பிக்கும்போது நறுக்கிவைத்துள்ளவற்றை போட்டு லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு பொரித்துவைத்துள்ள கோழியை அதில் போட்டு புரட்டி, மீதி உப்பை சேர்த்து கிளறி, அதன் மேல் மல்லி கீரயை நைஸாக அரிந்துப்போட்டு மீண்டும் புரட்டி, இறக்கும் முன் எலுமிச்சை பழத்தை பிழிந்து புரட்டிவிட்டு எடுத்துவிடவேண்டும்.


குறிப்பு:
வெங்காயம் அரைவேக்காடாக இருப்பதுதான் சாப்பீஸுக்கு நல்ல மணம் கொடுக்கும்!

பரிமாறும் அளவு 3 அல்லது 4 நபர்களுக்கு
==================================================================

சிக்கன் நவாபி

தேவையான பொருட்கள்
கோழி - இரண்டு
வினிகர் - 4 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 8
வெள்ளை மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
ஜாதிபத்ரி பொடி - அரைத்தேக்கரண்டி
இஞ்சி விழுது - 4 தேக்கரண்டி
பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தயிர் - 2 கப்
ஃப்ரஷ் கிரீம் - 7 மேசைக்கரண்டி
வெண்ணெய் - சிறிதளவு

செய்முறை
கோழியினை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயினை கழுவி, இரண்டாக கீறி, உட்புற தண்டு மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பொடியாய் நறுக்கின மிளகாய் துண்டுகளுடன் இஞ்சி பூண்டு விழுது, ஜாதிபத்ரி, மிளகு தூள், தேவையான உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் வினிகர் ஊற்றி அதனுடன் நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை கோழிக்கறியின் மீது தடவி சுமார் 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
பிறகு தயிரினை ஒரு மெல்லிய துணியில் கட்டி சுமார் 4 மணி நேரம் வைத்து இருந்து நீரை வடியவிட்டு எடுத்துக் கொண்டு, அத்துடன் கிரீமினை சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த கலவையினை கோழித்துண்டங்கள் மீது நன்கு தடவி மூன்று மணி நேரம் ஊற விடவும்.
இந்த கறியினை கம்பியில் சொருகி, 350 டிகிரி F ற்கு சூடேற்றப்பட்ட ஓவனில் வைத்து 12 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
தந்தூரி அடுப்பில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்தால் போதுமானது. அவ்வபோது எடுத்து நீரை வடித்துவிட்டு, வெண்ணெய் தடவி வேகவிடவும்.

பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
============================================================

சாஹி சிக்கன் குருமா

தேவையான பொருட்கள்
கோழிக்கறி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - 3
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரைத் தேக்கரண்டி
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 8 பல்
தயிர் - ஒரு கோப்பை
நெய் - 3 மேசைக்கரண்டி
பாதாம் பருப்பு - 5
முந்திரிப்பருப்பு - 10
எலுமிச்சை சாறு - தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
தயிரை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் மஞ்சள்த் தூள், தேவையான உப்பு சேர்த்து கோழிக்கறியுடன் நன்கு கலந்து சுமார் அரை மணி நேரம் அப்படியே ஊற விடவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலி அல்லது பானில் நெய் ஊற்றி சூடேறியதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாய் வரும் அளவிற்கு வதக்கவும்.
அத்துடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வேக விடவும்.
பிறகு கோழித்துண்டுகளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக விடவும். அதன்பின் இரண்டு டம்ளர் சுடுதண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
கறி நன்கு, மென்மையாகம் அளவிற்கு வெந்தவுடன் கரம் மசாலா, உப்பு மற்றும் பாதாம், முந்திரித் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி சிறிது நேரத்தில் இறக்கி விடவும்.
பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித் தழையினைத் தூவிப் பரிமாறவும்.
============================================================

சிக்கன் நூர்ஜகானி

தேவையான பொருட்கள்
முழுக்கோழி - ஒன்று
நெய் - 6 மேசைக்கரண்டி
பிரிஞ்சி இலை - 6
குங்குமப்பூ பொடி - கால் தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 3
தயிர் - 2 கப்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 8 பல்
பச்சை மிளகாய் - 4
கிராம்பு - 4
பட்டை - ஒரு அங்குலத் துண்டு
ஏலக்காய் - 3
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கிராம்பு, பட்டை, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
முழுக்கோழியினை அப்படியே நன்கு சுத்தம் செய்து விட்டு, ஒரு முள்கரண்டிக் கொண்டு அதன் மேல்புறம் முழுவதையும் குத்து மசாலா இறங்குவதற்கு வழி செய்யவும்.
பிறகு தயிரினை நன்கு அடித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் கலந்து அதனை முழுக்கோழியின் மீது நன்கு தடவவும்.
மசாலா நன்கு கறியினுள் இறங்குவதற்கு, சுமார் மூன்று அல்லது நான்கு மணி நேரம் அப்படியே ஊற விடவும்.
பிறகு ஒரு வாணலியில் நெய் ஊற்றி, பிரிஞ்சி இலை மற்றும் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
இப்போது மசாலா தடவி வைத்துள்ள முழுக்கோழியினை நெய்யில் போட்டு, குங்குமப்பூ பொடி, தேவையான உப்பு சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வேக விடவும்.
மசாலா நன்கு பரவி, கறியானது பொன்னிறமாக நன்கு வெந்தவுடன் எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
=================================================================

சிக்கன் பராத்தா

தேவையான பொருட்கள்
மைதா மாவு - கால் கிலோ
கோழிக்கறி - அரைக் கிலோ
பச்சை மிளகாய் - 6
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
இஞ்சி - 2 அங்குலத்துண்டு
நெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிது

செய்முறை
மைதா மாவுடன் ஒரு தேக்கரண்டி நெய், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து பராத்தாவிற்கு மாவு தயார் செய்து வைக்கவும்.
மாவினை நன்கு பிசைந்து பிறகு அதனை ஒரு ஈரத்துணிக் கொண்டு மூடி இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விடவும்.
பராத்தாவிற்கு மாவு தயாரான பிறகு, ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு இஞ்சி, பூண்டினை போட்டு வதக்கவும்.
அத்துடன் நறுக்கிய கோழிக்கறித் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும்.
இத்துடன் நறுக்கிய தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். நெய்யானது பிரிந்து வரும் சமயம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு, பின்பு இறக்கி வைத்து சற்று ஆறவிடவும்.
இப்போது பிசைந்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திப் போன்று மெல்லியதாக தேய்த்துக் கொள்ளவும்.
தயாரித்து வைத்துள்ள சிக்கன் மசாலாவில் சிறிதை ஒரு சப்பாத்தியின் மீது வைத்து மற்றொரு சப்பாத்திக் கொண்டு மூடி ஓரங்களைக் கையினால் அழுத்தி ஒட்டி விடவும்.
பிறகு அதனை அப்படியே உருளைகளாக உருட்டிக் கொள்ளவும். இப்படியே அனைத்து மாவையும் பராத்தா உருளைகளாகத் தயார் செய்துக் கொள்ளவும்.
ஒரு தவாவில் உருளைகளை ஒன்று அல்லது இரண்டாகப் போட்டு, இரண்டு புறங்களிலும் பொன்னிறமாக சிவக்கும் வரை வேக வைத்து எடுக்கவும்.
==================================================================

சிக்கன் ஷெரின்

தேவையான பொருட்கள்
கோழி - ஒன்று (நடுத்தரமானது)
நெய் - கால் கப்
சிக்கன் ஸ்டாக் - 2 கப்
அன்னாசி - ஒரு துண்டு
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி
சோளமாவு - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 6 பல்
இஞ்சி - அரை அங்குலத்துண்டு
பிஸ்தா - சிறிது அலங்கரிக்க
பாதாம் - சிறிது அலங்கரிக்க
உப்பு - தேவையான அளவு

செய்முறை
இஞ்சி பூண்டினை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். அன்னாசியையும் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கவும்.
கோழிக்கறியினை சுத்தம் செய்து, எலும்புகள் நீக்கி நீளவாக்கில் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
சிக்கன் ஸ்டாக் தயாரிக்க, கோழி எலும்புகள், நறுக்கின வெங்காயம் சிறிது, ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி, சிறிது உப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் மிதமான தீயில் வேக வைத்து, பிறகு நீரினை தனியே வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
எலும்பு நீக்கி துண்டுக்களாக்கி வைத்துள்ள கோழிக்கறியினை தனியே குக்கரில் கால் மணி நேரம் போதுமான நீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். தேவையெனில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு சூடேறியதும் கோழித்துண்டங்களைப் போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுத்து தனியே ஒரு தட்டில் வைக்கவும்.
பிறகு அதே நெய்யில் நறுக்கின பூண்டு, இஞ்சியினைச் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைத்துள்ள சிக்கன் மீது ஊற்றவும்.
மீண்டும் வாணலியில் சிக்கன் ஸ்டாக்கினை ஊற்றி வேகவைக்கவும். அத்துடன் தேவையான உப்பு, மிளகுத்தூள், சோளமாவு சேர்த்து நன்கு விடாது கலக்கி குழம்பு கெட்டியாக வரும் வரை வேகவைக்கவும்.
பிறகு அன்னாசி துண்டங்களைச் சேர்த்து கலக்கி சிக்கன் மீது ஊற்றி, பாதாம், பிஸ்தா தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
=======================================================================

சிக்கன் அக்பரா

தேவையான பொருட்கள்
சிக்கன் - கால் கிலோ(எலும்பில்லாமல்)
நெய் - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 4 (நடுத்தரமானது)
தக்காளி - 5
பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறிய துண்டு
மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை
வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கி, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு தவாவில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் வெங்காயக் கலவை விழுதினைப் போட்டு லேசாக சில நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு அத்துடன் மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கி சிறிது நேரம் வேகவிடவும்.
பச்சை வாடை போனவுடன் நறுக்கி வைத்துள்ள கோழித்துண்டுகளை சேர்த்து நன்கு வேகவிடவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து தவாவை மூடி வைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மிதமான தீயில் வேகவிடவும். அவ்வபோது திறந்து பார்த்து தண்ணீர் வற்றியிருந்தால் சுடுநீர் சேர்த்து வேகவிடவும்.
கறியானது நன்கு வெந்து, கரைந்து இருக்கவேண்டும். அதன்பிறகு அத்துடன் நறுக்கின தக்காளி மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கி மேலும் ஒரு 15 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
தீயைக் குறைவாக வைத்துக் கொள்ளவும். குழம்பு அதிகமாக இருந்தால் மூடியை எடுத்துவிட்டு திறந்த நிலையில் வேகவைக்கவும்.
இது சப்பாத்தி, புரோட்டா, புலாவ் ஆகியவற்றுக்கு சரியான பக்க உணவு.

பரிமாறும் அளவு 3 நபர்களுக்கு
====================================================================
தாஜ் சிக்கன் குருமா

தேவையான பொருட்கள்
கோழி இறைச்சி - முக்கால் கிலோ
பெரிய வெங்காயம் - 3 நடுத்தரமானது
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 6
பாதாம் பருப்பு - 12
பிஸ்தா - 10
ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - அரைத் தேக்கரண்டி
கோவா - அரை கப்
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - கால் கப்
ப்ரஷ் க்ரீம் - கால் கப்
ரோஜா இதழ்கள் - 10 (உலர்ந்தது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை
கோழி இறைச்சியினை நன்கு கழுவி சுத்தம் செய்து கொண்டு, மேல் தோலினை நீக்கிவிட்டு 15 துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தினை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் தண்டுகளை நீக்கி அரிந்து கொள்ளவும்.
இஞ்சி பூண்டினை பச்சை மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கோப்பை வெந்நீரில் பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளை சுமார் 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து எடுத்து தோலுரித்து மையாக அரைத்துக் கொள்ளவும். தயிரினை சிறிது நீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கின வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அத்துடன் இஞ்சி பூண்டு மிளகாய் விழுதினைச் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா விழுதினையும், கோவாவினையும் சேர்த்து ஒரு கோப்பை வெந்நீர் விட்டு குறைந்த தீயில் சுமார் 15 நிமிடங்கள் வேக விடவும். அவ்வபோது விடாது கிளறவும்.
பிறகு கோழித் துண்டங்களைப் போட்டு அடித்து வைத்துள்ள தயிரினையும் ஊற்றி, மூடி வைத்து, குறைந்த தீயில் சுமார் 10 நிமிடங்கள் வேக விடவும்.
அவ்வபோது திறந்து கிளறி விடவும். அதன் பிறகு மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி மேலும் சில நிமிடங்கள் வேக விடவும்.
இறைச்சி நன்கு வெந்தவுடன் ப்ரஷ் க்ரீமினைச் சேர்த்துக் கலக்கவும். ஏலப்பொடி மற்றும் ரோஜா இதழ்களைத் தூவி இரண்டு நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து இறக்கிவிடவும்.
பொடியாக நறுக்கின பாதாம், பிஸ்தா துகள்களை இதன் மீது தூவி அலங்கரிக்கலாம்.

பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
================================================================
சிக்கன் தர்பாரி

தேவையான பொருட்கள்
கோழி - ஒன்று
தக்காளி - அரை கப் (நறுக்கியது)
கொண்டைக்கடலை - அரை கப்
முந்திரி - 20
தேங்காய்ப்பால் - ஒரு கப்
புளிக்கரைசல் - ஒரு கப்
இஞ்சி - ஒரு அங்குலதுண்டு
பூண்டு - 10
உலர்ந்த மிளகாய் - 4
கிராம்பு - 4
பட்டை - இரண்டு அங்குலத் துண்டு
ஏலக்காய் - 6
மல்லி - ஒரு மேசைக்கரண்டி
கசகசா - அரை மேசைக்கரண்டி
நெய் - 3 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2 (சிறியது)
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை
கொண்டைக்கடலையை மூன்று அல்லது நான்கு மணி நேரம் நன்கு ஊற வைத்து, பிறகு வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி ஒரு கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து, மிதமான வெந்நீரில் கரைத்து ஒரு கப் அளவிற்கு நீரினை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டினை தோலுரித்து மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். முந்திரியை தனியே விழுதாக அரைத்து வைக்கவும்.
கிராம்பு, பட்டை, ஏலக்காய், மல்லி, கசகசா ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து மிக்ஸியில் இட்டு தூளாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு சூடேறியதும், நறுக்கின வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதினையும், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள கோழித்துண்டங்களைச் சேர்த்து, குறைந்த தீயில் கோழி இறைச்சியில் உள்ள நீர் வற்றும் வரை வேகவிடவும்.
இப்போது நறுக்கின தக்காளி மற்றும் பொடியாக அரைத்து வைத்துள்ள கிராம்பு, ஏலம், மல்லி மசாலாவினையும் சேர்த்து நன்கு கிளறி தீயை சற்று அதிகப்படுத்தி வேக விடவும்.
மசாலா தக்காளியுடன் நன்கு கலந்து வெந்தவுடன், மசித்து வைத்துள்ள கொண்டைக்கடலை, முந்திரி விழுது, தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து வேகவிடவும்.
இறுதியாக புளிக்கரைசலை சேர்த்து, குழம்பு நன்கு கெட்டியாகும் வரை வேகவிட்டு இறக்கிப் பரிமாறவும்.
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
======================================================================
ஷஹான்ஷாஹி சிக்கன்

தேவையான பொருட்கள்
கோழிக்கறி - ஒரு கிலோ
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 4
நிலக்கடலை - ஒரு கப்
ஏலக்காய் - 10
இலவங்கப்பட்டை - இரண்டு அங்குலத் துண்டு
உலர் திராட்சை - கால் கப்
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
நெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை
கடலையை சுமார் நான்கு மணி நேரம் நீரில் ஊற வைத்து, தோலுரித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
உலர்ந்த திராட்சையையும் கழுவி சுத்தம் செய்து மையாக அரைத்து எடுக்கவும்.
பச்சை மிளகாயையும், சீரகத்தையும் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
அடிப்பக்கம் தட்டையான ஒரு தவாவில் நெய் ஊற்றி பட்டை, ஏலக்காய் போட்டு லேசாக வதக்கவும். பிறகு அதில் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதன் பிறகு கோழித் துண்டுகளையும், பச்சை மிளகாய் விழுதினையும் சேர்த்து, நன்கு கலந்து, குறைந்த தீயில் கோழி இறைச்சி வெந்து மிருதுவாகும் வரை வேக விடவும்.
அதன் பிறகு நிலக்கடலை விழுதினைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு வேகவிடவும்.
பிறகு உலர் திராட்சை விழுதினை சேர்த்து, நெய் பிரிந்து மிதக்கும் வரை குறைந்த தீயில் வேகவிடவும்.
கறி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்
=======================================================================

ஷாஜகானி சிக்கன் மசாலா

தேவையான பொருட்கள்
கோழி - ஒன்று
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 6 பல்
ப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்
ஜாதிக்காய்பொடி - ஒரு சிட்டிகை
ஏலப்பொடி - அரைத்தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரைத்தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
முந்திரிபருப்பு - 15
பாதாம்பருப்பு - 10
பிரியாணி இலை - இரண்டு
நெய் - 6 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை
கோழியினை சுத்தம் செய்து, துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
பூண்டினை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். முந்திரி, பாதாம் இரண்டையும் பொடித்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் சீரகம், கசகசா, வெந்தயம் ஆகியவற்றை லேசாக வறுத்து எடுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
இத்துடன் கோழித்துண்டங்களைச் சேர்த்து நன்கு பிரட்டி வேகவிடவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடி, மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் வேகவிடவும்.
அதன்பிறகு அதில் க்ரீம் சேர்த்து, அரை கப் வெந்நீரும் ஊற்றி நீரானது வற்றும் வரை வேகவிடவும்.
நீர் காய்ந்ததும் கரம் மசாலாத்தூள், ஜாதிக்காய்ப் பொடி, ஏலப்பொடி, முந்திரி, பாதாம் பொடி ஆகியவற்றைச் சேர்த்து ஒருமுறை பிரட்டி விட்டு, மூடி வைத்து சுமார் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும்.
கறி நன்கு வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
===================================================================
மொஹல் சிக்கன் கபாப்

தேவையான பொருட்கள்
சிக்கன் - அரைக்கிலோ (எலும்பில்லாமல்)
சோளமாவு - ஒரு கப்
இஞ்சி சாறு - ஒரு தேக்கரண்டி
பூண்டு சாறு - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை
கோழி இறைச்சியினை எலும்புகள் நீக்கி, கழுவி சுத்தம் செய்து துண்டங்களாக்கிக் கொள்ளவும்.
நறுக்கின இறைச்சி துண்டங்களை வினிகர், இஞ்சி, பூண்டு சாறூ ஆகியவற்றுடன் கலந்து, தேவையான உப்பும் சேர்த்து சுமார் 12 மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு அழுத்தமான ப்ளாஸ்டிக் பையில் சோளமாவினை எடுத்துக் கொண்டு அதில் சிறிது உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அதில் ஊற வைத்துள்ள கோழித்துண்டங்களை எடுத்துப் போட்டு, பையுடன் நன்கு குலுக்கி கலக்கவும்.
ஒரு வாணலியில் நெய்யினை விட்டு நன்கு, அதிக வெப்பத்திற்கு சூடாக்கவும்.
அதில் சிறிது கோழித் துண்டங்களைப் போட்டு அதிகத் தீயில் நன்கு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
மீண்டும் மீதமுள்ள கோழித் துண்டங்களைப் பொரித்து எடுக்கும் முன், நெய்யினை அதிக சூட்டிற்கு கொண்டு வரவும். அதன் பின்னர் மீதமுள்ள கோழித்துண்டங்களைப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
===============================================================
மொஹல் சிக்கன் கறி


தேவையான பொருட்கள்
கோழிக்கறி - அரைக்கிலோ (கொத்தியது)
பச்சைமிளகாய் - 6
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10
இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
நெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு

செய்முறை
இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு முதலில் இஞ்சி, பூண்டு நறுக்கியவற்றைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அத்துடன் கொத்திய கோழிக்கறியினை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்துப் பிரட்டி மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.
கறி முக்கால் பாகம் வெந்த நிலையில் நறுக்கின தக்காளியைச் சேர்த்து, தீயை சற்று அதிகமாக்கி நெய் பிரியும் வரை வதக்கவும்.
அதன்பின் பொடியாய் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
கறி நன்கு வேகும் வரை வைத்திருந்து வெந்தவுடன் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். இது சப்பாத்தி, பரோட்டாவுடன் சேர்த்துச் சாப்பிட உகந்தது.

பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
===================================================================

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner