Ads Header

Pages


18 March 2012

எந்த நோய்க்கு என்ன சாப்பாடு?

உஷ்ணத்தை மாயமாக்கும் மாங்காய் பானகம்!
"அக்னி நட்சத்திரத்தைக் கடந்துவிட்ட பிறகும்கூட, 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்பு விலகியபாடில்லை. எங்கள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கும் வயோதிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ள முடிகிறது'' என்று சொல்லும் 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, முதலில் அதன் பாதிப்புகளைப் பற்றி பேசுகிறார். அதைக் கேட்டு முடித்த பிறகு, உஷ்ணத் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான உணவுகளைப் பார்ப்போம்.
"கோடையில் வரும் 'ஹீட் ஸ்ட்ரோக்', அதிகம் பாதிப்பது வயதானவர்களைத்தான். வெப்பத்தின் காரணமாக... உடம்பு சூடாகி, மூளையின் செயல்பாடு குறையும். அதிகமாக வியர்த்து, மயக்கநிலைக்கு கொண்டு சென்றுவிடும். நினைவுகூட தப்பலாம். ரத்த அழுத்த நோயானது, உஷ்ண உடம்பு இருப்பவர்களை எளிதில் தாக்கும்.
பாலைக் காய்ச்சி, உடனே ஃப்ரிட்ஜில் வைக்காமல், ஆற வைத்துதானே வைப்போம். அதுபோல்தான், வெளியில் சென்றுவிட்டு, திரும்பியவுடன் பத்து நிமிடம் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். குளிர்ச்சியாக எதைக் குடித்தாலும், இருமல், சளி உடனடியாக ஒட்டிக் கொண்டுவிடும். 'கசகசவென்று இருக்கிறது. ஒரு குளியல் போட்டால் தேவல' என்றபடி உடனடியாக குளிப்பதும் தவறு. அதுவும் நோயில் கிடத்திவிடும்.
வியர்வை அதிகம் சுரப்பதால், அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வயதானவர்களைப் பொறுத்தவரை, காலை பத்து மணி முதல் நான்கு மணி வரை வெளியில் செல்வதை ஒட்டுமொத்தமாக தவிர்ப்பது நல்லது."
என்ன, டயட்டீஷியன் சொன்னதைஎல்லாம் உள்வாங்கிவிட்டீர்கள்தானே? இதோ... உங்களுக்கான ரெசிபிகள்..!
தர்பூசணி கீர்
தேவையானவை: தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - 75 கிராம், கன்டென்ஸ்டு மில்க் - 5 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன் (அ) தேங்காய்ப் பால் - ஒரு சிறிய கப், குங்குமப்பூ - சிறிதளவு, பால் க்ரீம் - ஒரு சிறிய கப்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில், பால், தேங்காய்ப் பால் பவுடர் இரண்டையும் சேர்த்துக் கலக்குங்கள். அது திக்காகிவிடும். பிறகு, தர்பூசணி தவிர, மற்ற எல்லாவற்றையும் அதில் சேருங்கள். கடைசியாக தர்பூசணியைச் சேர்த்துக் கலக்குங்கள். சற்றே நீர்த்து வரும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, காலை பதினோரு மணி வாக்கில் சாப்பிடலாம்.
மாங்காய் எலுமிச்சை பானகம்
தேவையானவை: மாங்காய் - 1, கருப்பட்டி வடிகட்டிய கரைசல் - 2 கப், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், துருவிய எலுமிச்சை தோல் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 துளி.
செய்முறை: மாங்காயைத் தோலுடன் துருவிக் கொள்ளவும். கருப்பட்டி கரைசலில் எலுமிச்சை தோல் துருவல், மாங்காய் துருவல், சுக்குப் பொடி சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கினால், பானகம் தயார்.
மதியம் சாப்பிட்டு முடித்ததும் அரை மணி நேரத்துக்குப் பிறகு, இதை அருந்தலாம். மாலை ஆறு மணிக்கு மேல் குடிப்பது நல்லதல்ல.
மாம்பழ தயிர் சாதம்
தேவையானவை: வடித்த சாதம் - 2 கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மாம்பழ கூழ் - 50 கிராம், தயிர், உப்பு - தேவையான அளவு, காய்ச்சிய பால் - ஒரு சிறிய கப், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: சாதத்துடன் எல்லாவற்றையும் கலந்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும். இந்த தயிர்சாதத்தை மதிய நேரம் சாப்பிடலாம்.
ரெசிபிகளைப் படித்துப் பார்த்த, 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, "மூன்றுமே, உஷ்ண நோய்களை விரட்டும் உன்னத ரெசிபிகள்தான். தர்பூசணி கீர் நல்ல எனர்ஜியை தரும். அதிக அளவு நீர்ச்சத்தும், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின், மினரல்ஸ் எல்லாம் கிடைத்துவிடும். கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் மட்டும், கொழுப்பு நீக்கப்பட்ட பாலை காய்ச்சி சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், தர்பூசணிக்கு பதிலாக கிர்ணிப்பழம் சேர்த்து 'திக்'காக செய்து சாப்பிடவேண்டும்.
மாங்காய், நாக்கில் எச்சிலை ஊற வைத்துக் கொண்டே இருப்பதால், தாகம் எடுக்காது. கருப்பட்டி ஜீரணத்தைக் கொடுக்கும். எலுமிச்சை தோலில் பைஃபர், விட்டமின், மினரல்ஸ் இருப்பதால், உச்சிவெயிலுக்கு ஏற்ற உற்சாக பானம்தான் மாங்காய்-எலுமிச்சை பானகம்.
அதேபோல், மாம்பழத்தில் பீட்டா கரோட்டின், பாலில் கொழுப்பு, தயிரில் புரதம், விட்டமின்-சி, கார்போஹைட்ரேட் இருப்பதால், மாம்பழ தயிர் சாதத்தில் எல்லாச் சத்துக்களுமே கிடைத்துவிடுகிறது. உடலை குளிர்ச்சியாக்கி, நல்ல எதிர்ப்பு சக்தியையும் தரும்'' என்று சொன்னார்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner