Ads Header

Pages


15 March 2012

முந்திரி குருமா-முளைப்பயறு ஸ்நாக்ஸ் வாசுகிகள் கைமணம்!

முந்திரி குருமா

தேவையானவை: பொடியாக நறுக்கிய காய்கறிகள் - ஒரு கப், முந்திரி, தக்காளி விழுது - தலா 2 கப், வெங்காயம் - 2, புளிக்காத தயிர், எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

அரைத்துக் கொள்ள: இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல், பச்சைமிளகாய் - 2, மிளகாய்த்தூள், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்,
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1. தனியாக அரைக்க: முந்திரி - 8, தேங்காய் துருவல் - அரை கப்.

செய்முறை: காய்கறிகளில் ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய், நெய்யைக் கலந்து காய வைத்து அதில், முந்திரியை வறுத்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலா விழுதை பச்சை வாடை போக வதக்கி, தக்காளி விழுது சேர்த்து, குறைந்த தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். தயிரைக் கடைந்து அதில் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து, அரைத்த தேங்காய் - முந்திரி விழுது, உப்பு சேர்த்து, தேவையெனில் தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
--------------------------------------------------------------------------------
-முளைப்பயறு ஸ்நாக்ஸ்



தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், முளைப்பயறு - அரை கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

அரைத்துக் கொள்ள: தேங்காய் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 3, சீரகம் - ஒரு டீஸ்பூன், விருப்பப்பட்டால் பூண்டு - ஒரு பல் (தட்டிக் கொள்ளவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: மாவுடன் உப்பு சேர்த்து, கொதிக்கும் நீரை அதில் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை தேன்குழல் அச்சில் போட்டு இட்லித் தட்டில் இடியாப்பம் போல் பிழிந்து கொள்ளவும். எல்லாவற்றையும் இதுபோல் பிழிந்து வேக வைத்து எடுக்கவும். ஆறியதும், சிறு துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை விட்டு கொதிக்க வைத்து, அதில் முளைப்பயறை போட்டு 2 நிமிடம் வைத்து எடுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை காய வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து பூண்டு, அரைத்த விழுதை சேர்க்கவும். மூன்று நிமிடம் நன்றாக வதக்கி, அதில் நறுக்கிய இடியாப்பம், வேக வைத்த முளைப்பயறை சேர்க்கவும். நெய், கொத்தமல்லி, தேவையான உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner