Ads Header

Pages


14 March 2012

வாசகிகள் கைமணம்! ஓட்ஸ் ஃபைபர் அடை! அம்மணி உருண்டை

ஓட்ஸ் ஃபைபர் அடை
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பொட்டுக்கடலை, பச்சரிசி - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 1, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி - ஒரு துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஓட்ஸ், பச்சரிசி, பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் ரவை போல் பொடிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்.
தோசைக்கல்லை காய வைத்து, எலுமிச்சையளவு மாவை எடுத்து சின்ன அடையாகத் தட்டி போட்டு இரு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். (இதற்கு எண்ணெய் அதிகம் தேவையில்லை. சிறிதளவு தெளித்தால் போதும்).


சோளப்பொரி உருண்டை
தேவையானவை: நாட்டு சோளப் பொரி - 2 கப், பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வெல்லம் - கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: சோளப்பொரியை மண் இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, பாகு காய்ச்சவும். பிறகு, இறக்கி வைத்து அதில் தேங்காய், ஏலக்காய்த்தூள், பொரி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். சிறிது ஆறியதும், கையில் நெய்யை தொட்டுக் கொண்டு உருண்டைகளாகப் பிடிக்கவும். முதலில் வேக வேகமாக எல்லாவற்றையும் உருண்டைகளாகப் பிடித்துவிட்டு, பிறகு நிதானமாக ஒவ்வொரு உருண்டையையும் அழுத்தி விடவும்.
கார்த்திகை தீபத்துக்கு இது கலக்கலான சோளப்பொரி உருண்டையாக இருக்கும்.



ஃப்ரூட்-நட்ஸ் ஸ்பாஞ்ச் அப்பம்
தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு - கால் கப், முந்திரி-பாதாம் அரைத்த விழுது, தேங்காய் துருவல் - தலா அரை கப், வாழைப்பழம், ஆப்பிள் - தலா 1, சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2, வெல்லத்தூள் - 2 கப், நெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: மாவுகளை சலித்துக் கொள்ளவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, மசிக்கவும். வாழைப்பழத்தை மசித்துக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் துருவலை நைஸாகப் பொடித்து, தோல், விதை நீக்கிய ஆப்பிள் துண்டுகளைப் போட்டு அரைக்கவும்.
வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இதில் சலித்த மாவுகள், முந்திரி - பாதாம் விழுது, மசித்த வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், நெய், தேங்காய்-ஆப்பிள் கலவையைப் போட்டுக் கலக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்துக் கரண்டியால் ஊற்றும் அளவுக்கு மாவைக் கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை ஊற்றி, உப்பியதும் திருப்பி விட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.


வாசகிகளின் குறிப்புகளை தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ் : ஓட்ஸ் ஃபைபர் அடை: ஏதேனும் ஒரு பருப்பை அரைத்து சேர்த்து செய்யலாம். கூடுதல் சுவையாக இருக்கும்.
சோளப்பொரி உருண்டை: பொரியுடன் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலையையும் சேர்க்கலாம்.
ஃப்ரூட்-நட்ஸ் ஸ்பாஞ்ச் அப்பம்: தேங்காய் துருவலுக்கு பதிலாக தேங்காய்ப் பாலை சேர்த்தால் வாசனையாக இருக்கும்
------------------------------------------------------------------------------------


அம்மணி உருண்டை


தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், பொட்டுக்கடலை, எள், அவல், தேங்காய் துருவல் - தலா அரை கப், பேரீச்சம்பழம் - 8, வெல்லப்பொடி - 2 கப்.

செய்முறை: வேர்க்கடலை, எள்ளைத் தனித்தனியே வறுக்கவும். வறுத்த வேர்க்கடலையின் தோல் நீக்கி, எள், பொட்டுக்கடலை, அவல், பேரீச்சம்பழம், வெல்லப்பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து ஒருமுறை சுற்றி எடுத்து கோலிக்குண்டு அளவுக்கு உருண்டைகளாக உருட்டவும். சத்துக்கள் நிறைந்த உருண்டை இது.
--------------------------------------------------------------------
இலை கொழுக்கட்டை


தேவையானவை:
பச்சரிசி, பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், கெட்டி அவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், துண்டுகளாக நறுக்கிய வாழை இலை - 6.

செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து இட்லி மாவு பதத்தில் அரைக்கவும். வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் மூன்றையும் கலந்து பூரணம் போல் கிளறவும். அவலைக் கழுவிப் பிழிந்து பூரணத்தோடு சேர்த்துக் கிளறவும். வாழை இலையைத் துடைத்து சிறிது எண்ணெய் தடவி அதில் ஒரு கரண்டி மாவை விட்டு, நடுவில் பூரணத்தை வைத்து இலையை மடிக்கவும். இட்லித் தட்டில் மடித்து வைத்த இலைப் பொட்டலங்களை வைத்து, ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
----------------------------------------------------------------
சப்ஜா பானம்


தேவையானவை: ஜவ்வரிசி, சப்ஜா விதை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) - தலா கால் கப், தாளித்த நீர் மோர் - 4 கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சப்ஜா விதையை முந்தைய நாள் இரவே ஊற வைக்கவும். ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, நான்கு கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும், சப்ஜா விதைகளைப் போட்டு இறக்கவும். ஆற வைத்து தாளித்த நீர் மோரை விட்டு, உப்பு சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பருகவும். கோடைக்கேற்ற குளிர் பானம் இது.
---------------------------------------------------------------
அம்மணி உருண்டை: உருட்டும்போது பாதாம், முந்திரிப் பருப்பை வறுத்து பொடித்து சேர்த்து செய்தால், இன்னும் சத்து கூடும்.

இலை கொழுக்கட்டை: ஸ்வீட் பூரணத்துக்கு பதிலாக காய்கறிகளில் காரம் சேர்த்து வதக்கி, கார கொழுக்கட்டையும் செய்யலாம்.

சப்ஜா பானம்: வெள்ளரிக்காய், பூசணிக்காயை துருவி சேர்த்தால் குளுகுளுவென டேஸ்ட்டாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------
மைதா-ரவா வடை

தேவையானவை: மைதா மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப், ரவை, வேர்க்கடலைப் பொடி, தயிர் - தலா அரை கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி விழுது - அரை டீஸ்பூன், சமையல் சோடா - கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, வேர்க்கடலைப் பொடி, வெங்காயம், இஞ்சி விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சமையல் சோடா, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கவும். இதில் தயிர் விட்டு வடை மாவு பதத்துக்கு கெட்டியாகப் பிசையவும். தேவைப் பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிசைந்த மாவை சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

மைதா-ரவா வடை: வடைக்கு கலக்கும்போது சில பருப்பு வகைகள், தேங்காய் துருவல் சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner