Ads Header

Pages


09 April 2012

நெல்லிக்காய் ரெஸிபிகள் சமையல் குறிப்புகள் !


இதோ, நெல்லிக்காய் சீஸன் வந்துவிட்டது. விதவிதமாய் நெல்லிக்காய் ரெஸிபிகள் செய்து அசத்துங்களேன்!.

நெல்லிக்காய் சொதி

தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் - 1 கப், தேங்காய் - 1 மூடி, பச்சைமிளகாய் - 7, பெரிய வெங்காயம் - 1, மஞ்சள் பொடி - 1/4டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, கிராம்பு - 2, பட்டை - 1, இஞ்சித் துண்டு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை : நெல்லிக்காயைக் கழுவி, கொட்டை நீக்கி, நான்கு துண்டுகளாக நறுக்கவும். தேங்காயைத் துருவி, மிக்ஸியில் அரைத்து, முதல் பால், இரண்டாம் பாலை எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி, நெல்லிக்காயையும் சேர்த்து வதக்கவும். பின், அத்துடன் இரண்டாவது தேங்காய் பாலை ஊற்றி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும். நெல்லிக்காய் வெந்ததும், முதல் பாலை விட்டுக் கொதி வந்ததும் இறக்கி விடவும். பரிமாறினால், அசத்தலாக இருக்கும்.

நெல்லிக்காய் ஜாமூன்

தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் - 1/4 கிலோ, சர்க்கரை - அரைகிலோ, சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்.

செய்முறை : முதலில் நல்ல நெல்லிக்காய்களாகத் தேர்வுசெய்து, கழுவிய பிறகு ஒரு சுத்தமான ஊசியால் நெல்லிக்காய் முழுவதும் குத்தவும். சமையல் சோடாவைத் தண்ணீரில் கலந்து அதில் நெல்லிக்காய்களைப் போட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு நெல்லிக்காய்களை நன்றாகக் கழுவி விட்டு, வேறு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நெல்லிக்காய்கள் `மெத்'தென்று ஆகும் வரை வேக வைக்கவும்! குங்குமப்பூவை இளம் சூடான நீரில் ஊற வைத்துக் கரைக்கவும். ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, தேவையான அளவு நீர் விட்டு, பாகுகாய்ச்சவும். பின்பு வேக வைத்த நெல்லிக்காய்களை பாகில் போட்டு, குறைந்த தணலில் சிறிது நேரம் வைத்திருக்கவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.

நெல்லிக்காய் ரவா அடை

தேவையான பொருட்கள் : வெள்ளை ரவை - 2 கப், கடலைப்பருப்பு, உளுந்து, துவரம்பருப்பு - தலா அரைகப், பெரிய நெல்லிக்காய் -அரைகப், பச்சைமிளகாய் - 6, கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு, நெய் - 1 டேபிள் ஸ்புன், பெருங்காயம் -சிறிதளவு, உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப, தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்.

செய்முறை : பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ரவையில் தேங்காய்ப் பாலை ஊற்றிப் பிசைந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். நெல்லிக்காயைக் கழுவி, துருவி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், மல்லி இலைகளைப் பொடியாக நறுக்கவும். அரைத்த பருப்புடன் ரவை, துருவிய நெல்லிக்காய், பச்சைமிளகாய், மல்லி சேர்த்து கலக்கவும். பெருங்காயம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கெட்டியாக இட்லி மாவு பதத்தில் கரைத்து, சூடான தவாவில் சிறு சிறு அடைகளாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, வேக விட்டு எடுக்கவும்.

அம்லா பைங்கன் பர்தா

தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் - 1/4 கிலோ, பெரிய நெல்லிக்காய் - 10, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், ஜீரகம் - சிறிதளவு, பச்சைமிளகாய் - 2, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, வெங்காயம் - 1, தக்காளி - 1, உப்பு - சுவைக்கேற்ப, தனியா தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்.

செய்முறை : கத்தரிக்காயை அடுப்பில் நன்றாகச் சுட்டு, தோலை உரித்து, துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும். நெல்லிக்காயை ஆவியில் வேக வைத்து எடுத்து, கொட்டை நீக்கி, மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளித்து, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு, மசித்த நெல்லிக்காயைச் சேர்த்து உப்பு, தனியா தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மூன்றையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். சிறிதளவு நீர் விட்டுக் கொதித்து வற்றியதும், கத்தரிக்காய் துண்டுகள், கரம் மசாலா சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner